ஜோதிடம் என்றால் என்ன?

ஜோதிடம் என்றால் என்ன?
                                                                                                                                          
ஜோதிடம் என்பது இராசிகள், நட்சத்திரங்கள், கிரகங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மக்களுடைய பல்வேறு செயற்பாடுகளுக்கான சரியான காலத்தை அறியவும், எதிர்கால நிகழ்வுகளை எடுத்துக் கூறவும், ஏற்படப் போகும் துன்பங்களில் இருந்து தப்புவதற்கான பரிகாரங்களை கண்டறியவும் உபயோகப்படும் ஒரு கணிப்பு முறையாகும்.

ஜோதிட சாஸ்திரம்: 
அண்ட வெளியில் உள்ள கோள்களின் நகர்வுகளும், அவைகளின் கதிர்வீச்சுகளும்; உலகில் வாழும் எல்லா உயிரினங்கள் மீதும், அவற்றின் செயற்பாடுகளிலும், மற்றும் பலவிதமான இயற்கை நிகழ்வுகளிலும் பல விழைவுகளை (தாக்கங்களை) உண்டு பண்ணி பலன்களை பிரதிபலிக்கின்றன என்பது நிரூபணமான முடிவு.

கோள்களின் இயக்கங்களை ஞான அறிவால் உணர்ந்த ஞானிகள்; அந்தந்த கோள்களின் நிலை, கதிர்வீச்சுகளின் பலம், வேகம், நகர்வுகள் அடிப்படையில் பூமியில் வாழும் உயிர்களுக்கு ஏற்படும் பலாபலன்களை (நன்மை தீமைகளை) ஜோதிட-கணித முறையில் கணக்கிட்டு ஜோதிட சாஸ்திர மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். அவற்றை கற்று பலன் பெறுவதே நமது நோக்கம்.

சோதிடமும் வானியலும்:








அண்டத்தில் லட்சகணக்கான விண்மீன் குடும்பங்கள் ( நட்சத்திரங்கள்) உள்ளன.  அவற்றுள் நம்மைச் சூழ்ந்துள்ள சூரிய-விண்மீன் குடும்பமும் ஒன்றாகும். இந்த சூரிய குடும்பத்தில் பல கிரகங்களும், அவற்றின் துணைக் கிரகங்களும் உள்ளன. அவை யாவும் சூரியனை தலைமை - மையமாக கொண்டு அதனைச் சுற்றி் வலம் வருகின்றன. இவற்றுள் நாம் இருக்கும் பூமியும் ஒன்றாகும்.

இந்த கோள்களில்; பூமிக்கு ஒரு துணைக்கோளும்; வியாழனுக்கு 63 துணைக்கோள்களும், சனிக்கு 62 துணைக்கோள்களும், யுரேனசுக்கு 27 துணைக்கோள்களும், நெப்டியூனுக்கு 13 துணைக்கோள்களும்;  செவ்வாய்க்கு உருளைக் கிழங்கு போல் இரண்டு சிறிய துணைக்கோள்களும் உள்ளன. புதனுக்கும், வெள்ளிக்கும் துணைக்கோள் இல்லை.

இந்த கிரகங்கள் யாவும் தம்மிடையே உள்ள ஈர்ப்பு விசையினால் இணைக்கப்பெற்று ஒரு குடும்பம் போல் அண்ட வெளியில் இயங்கிக் கொண்டு இருக்கின்றன. இவற்றுள் பூமியினுடைய துணைக்கோளான சந்திரனின் அசைவு பூமியில் உள்ள உயிர்கள் மீது பல தாக்கங்களை உண்டுபண்ணுவதால்; சோதிட சாஸ்திரத்தில் விஷேஷமாக கூறப்பெற்றுள்ளது.

சூரியன் உட்பட எல்லா விண்மீன்களும் ஒளிர்வன. சூரியனுடைய கிரகங்களும், உப-கிரகங்களும் தானாக ஒளிர்வதில்லை. ஆனால் அவைகள் யாவும் விண்மீன்களின் ஒளியைப் பெற்று பிரகாசிக்கின்றன (பிரதிபலிக்கின்றன). புராதன சோதிட நூல்கள் பூமியில் ஆதிக்கம் செலுத்தும் 9 கோள்களில் உண்மைக் கோள்கள்-7 என்றும், மற்றைய இரண்டும் நிழற்கோள்கள் என்றும் தெளிவு படுத்தியுள்ளது.

பூமி சூரியனை மையமாக கொண்டு Ecliptic எனப்படும் கிரக சுற்றுப் பாதை வலயத்தினூடாக ஊடாக தனக்கென அமைந்த பாதையில் சுற்றுவதைப்போல்; பூமியின் உடன் பிறப்புகளான மற்றைய 7 கிரகங்களும் இவ் கிரக சுற்றுப் பாதை வலயத்தினூடாக தத்தமது பாதைகளில், வித்தியாசமான வேகங்களில் சூரியனை சுற்றி வருகின்றன என்பதுவும் விஞ்ஞானிகளின் முடிவு. (சந்திரன் பூமியின் உபகிரகம் அதனால் அதன் சுற்று வித்தியாசமானது)

சூரிய கோள்கள் பின்வருமாறு:

1. சூரியன் - ஞாயிறு - Sun,
2. சந்திரன் - திங்கள் - Moon,
3. செவ்வாய் - Mars
4. புதன் - Mercury
5. குரு - வியாழன் - Jupiter
6. சுக்கிரன் - வெள்ளி - Venus
7. சனி - Saturn    
8. இராகு - (நிழற்கோள்)
9. கேது (நிழற்கோள்)

நாம் ஆலயத்தை சுற்றி அங்கப் பிரதிஷ்டை செய்வது போல் பூமியும் தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வலம் வருகின்றது. பூமி தன்னைத் தான் ஒருமு்றை சுற்ற ஒரு நாளும். சூரியனை ஒருமுறை சுற்றிவர 365 1/4 நாட்களையும் எடுக்கின்றது. அதனைச் சோதிடம்; சூரியன் பூமியை சுற்றிவர 365 1/4 நாட்கள் எடுக்கின்றது என கணிக்கிறது. பூமி தன்னைத் தானே சுற்றுவதனால் பகல், இரவு தோன்றுகின்றது. பூமி சூரியனைச் சுற்றி வலம் வருவதனால் பருவ காலங்கள் உண்டாகின்றன. இதுவே இயற்கையின் நியதி.

பூமியின் உப-கிரகமான சந்திரனும் தன்னைத் தானே சுற்றிக் கொண்டு பூமியை சுற்றி வர சைடீரியல் மாதப்படி 27.32 நாட்களும்; சந்திர மாதப்படி 28.25 முதல் 29.53 நாட்களும் ஆகின்றன. சந்திரன் தன்னைத் தானே ஒருமுறை சுற்றுவதற்குள் பூமி 27 முறை தன்னைத் தானே சுற்றி விடுகின்றது. அத்துடன் சந்திரன் பூமியுடன் இணைந்து சூரியனையும் சுற்றி வலம் வருகின்றது. சந்திரன் பூமியை சுற்றுவதனால் பூமியில் பூரணை (பௌர்ணமி), அமாவாசை, போன்ற 30 திதிதிகள் உண்டாகின்றன

Zodiac என்றழைக்கப்பெறும் இராசி மண்டல வலயம்:
புவியில் கோள்களினால் ஏற்படும் எல்லா (நிகழ்வுகளையும்) மாற்றங்களையும் உணர்ந்து கொள்வதற்கும், சோதிடப்படி கணக்கிடுவதற்கும், கோள்களின் நிலைகளையும், நகர்வுகளையும் பூமிக்கு சார்பாக கணித்துக் கொள்வதற்கும் சோதிட சாஸ்திரம் புவியை மையமாகக் கொண்ட கற்பனையான "Zodiac - என்றழைக்கப்படும் இராசி மண்டல வலயம்" அல்லது "அயன வீதி" என்ற ஒரு முறைமையை பயன்படுத்துகின்றது.

Zodiac என ஆங்கிலதில் அழைக்கப்படும் இராசி மண்டல வலயம்; கண்ணிற்கு புலப்படாத ஒரு கற்பனை வடிவமாகும். இவ் வலயம்; சூரியனை மையமாக கொண்டுள்ள Ecliptic எனப்படும் கிரக சுற்றுப் பாதைக்கு இருபுறமும் 9 பாகை அளவு விரிந்துள்ள வட்டப் பட்டி போன்ற ஒரு பகுதியெனக் கூறலாம்.  பூமியை சுற்றியுள்ள கற்பனையான இராசி மண்டல வலயத்தினூடாக சூரியன் உள்ளிட்ட எல்லாக் கிரகங்களும் பூமியை சுற்றி வருவதாக சோதிடம் கணிக்கின்றது.

கிரகங்கள் சூரியனை வலம் வரும்போது நீள் வட்டமாக சுற்றுவதனால் Ecliptic எனப்படும் கிரக சுற்றுப்பாதை முட்டை வடிவமாக அமைந்துள்ளது. அதுபோல் Zodiac என்று அழைக்கப்படும் இராசி மண்டல வலயமும் முட்டை வடிவினதாக அமைகின்றது.

பூமியின் துருவ அச்சினை மையமாகக் கொண்டு பூமியைச் சுற்றி உள்ள "Zodiac எனப்படும் கற்பனை இராசி மண்டல வலயத்தில் " உள்ள 360 பாகைகளையும் ஒவ்வொன்றும் 30 பாகைகளைக் கொண்ட 12 பகுதிகளாக பிரித்து கணிக்கப்பட்டுள்ளது.  அவை "1" பாகையில் இருந்து "30" பாகை வரை "மேஷ-ராசி" எனவும்;  "31" பாகை முதல் "60" பாகை வரை "ரிஷப-ராசி" எனவும்; இதுபோல் அடுத்து வரும் ஒவ்வொரு 30 பாகைகளைக் கொண்ட பகுதிகளும்; கீழே தரப்பட்டுள்ள 12 - இராசிகளின் பெயர்களால் அழைக்கப்பெறுகின்றன. இராசி மண்டல வலயத்தில் உள்ள மேஷ ராசியில் உதயமாகும் சூரிய பகவான் மீண்டும் மேஷ ராசிக்கு வரும் வரை உள்ள காலம் ஓர் தமிழ்-வருஷமாகும்.


-அடுத்த இடுகையில் தொடரும்.

0 கருத்துகள்:

 


ஜோதிடக்கலை - Templates Novo Blogger 2008
This template is brought to you by : allblogtools.com Blogger Templates