பஞ்சாங்க விளக்கம்









பஞ்சாங்க விளக்கம்:

பஞ்ச அங்கங்களைப் (ஐந்து-அங்கங்களைப்) பற்றிய விபரங்களை கூறுவது பங்சாங்கம். ஐந்து அங்கங்களாவன:

1. திதி,  2.வாரம்,  3.நக்ஷ்த்திரம்,  4.யோகம்,  5.கரணம் என்பனவாம்.

தற்பொழுது இரு வகையான பஞ்சாங்கங்கள் பாவனையில் உள்ளன.
ஒன்று "திருகணித பஞ்சாங்கம்", மற்றது "வாக்கிய பஞ்சாங்கம்".

கி.மு. 1200 முதல் கி.மு.400 முடிய உள்ள காலத்தில் 18 விதமான சித்தாந்தங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த 18 வகையான சித்தாந்தங்களை ஆதாரமாக வைத்தே பஞ்சாங்கங்கள் கணிக்கப்பெற்றன.

கிரகங்களின் வேகம், ராசிகளில் தங்கும் காலம் இவற்றை எல்லாம் கணிப்பதற்கு ஒரு முறையைக் கண்டு பிடித்தனர். இது வாக்கிய முறை எனப்பட்டது. இன்றும் இந்த முறையில் பஞ்சாங்கங்கள் வெளி வருகின்றன. இந்தப் பஞ்சாங்கங்கள் "வாக்கிய பஞ்சங்கம்" எனப்படும்.

காலப்போக்கில் வாக்கியப் பஞ்சாங்கங்கக் கணித முறையில் சில பிழைகளைக் கண்டறிந்தனர். அதனால் அவைகளை திருத்திப் புதிய முறையில் கணித்துக் கொண்டனர். திருத்திய திருகணித முறையை ஒட்டிய பஞ்சாங்கங்கள் "திருகணித பஞ்சாங்கம்" எனப்படும்.

இந்த 20-ம் நூற்றாண்டில் கிரகங்களை ஆராச்சி செய்து அறிவதற்கு பல தொழில் நுட்ப உபகரணங்கள் உள்ளன. அவைகள் மூலம் நுட்பமாக கிரகங்களின் வேகம், அவற்றின் நிலைகளைக் கண்டறியக் கூடியதாக உள்ளது. தற்போதுள்ள வான வியல் முறையும், திருகணித-பஞ்சாங்க முறையும் எந்த வித மாறுதலும் இல்லாமல் ஒரே மாதிரியாக இருக்கிறது. அதனால் திருகணித முறை தான் சரியான முறை என முடிவுக்கு வந்துள்ளார்கள். ஆனாலும் சிலர் வாக்கிய முறைதான் பழமையானது என்று பாவிப்பாரும் உளர்.

திதி: அமாவாசை தினத்தில் (அமாந்தத்தில்) சந்திரன்; சூரியனோடும், பூமியோடும் தக்ஷ்ணோத்தர ரேகையில் சமமாக ("0" டிகிரியில்) நின்ற பின் பூமியைச் கிழக்கு நோக்கி சுற்றும் போது சூரியனை பிரிகின்றது. இவ்வாறு சூரியனப் பிரியும் ஒவ்வொரு 12 பாகைகள் கொண்ட 30 பிரிவுகளும் திதிகள் எனப்படும்.

விளக்கமாக கூறுவதாயின்; சூரியன் - சந்திரன் - பூமி ஆகியவற்றிக் இடையில் ஏற்படும் கோண அளவைக் குறிப்பனவாகும். அவை பூர்வபக்க பிரதமை முதல் அமாவாசை வரையான 30 திதிகளாகும்.  அமாவாசையில் இருந்து பூரணை வரையான (பூர்வ பக்க பிரதமை முதல் பூரணை வரைன காலத்தில் வரும்) 15 திதிகளும் சுக்கில பட்சத் திதிகள் எனவும்; தேய் பிறை காலத்தில் அபரபக்க பிரதமை தொடக்கம் அமாவாசை வரை வரும் 15 திதிகளும் கிருஷ்ண பட்சத் திதிகள் எனவும் அழைக்கப்படும்


சந்திரன் தினமும் சுமார் 12 டிகிரி சூரியனின் பார்வையில் இருந்து விலகிச் சென்று கொண்டிருப்பார். 15 ஆவது தினமான பௌர்ணமி அன்று சூரியனில் இருந்து 180 டிகிரி தூரத்தில் இருப்பார். அப்போது சூரியனின் முழுப்பார்வையும் சந்திரனின் மேல் விழுகின்றது. அதாவது இராசிச் சக்கரத்தில் சூரியனில் இருந்து 7-வது ராசியில் சஞ்சரிப்பார்.

அம்மாவாசைக்கு மறுநாள் அன்று சந்திரன் 12 டிகிரி விலகி இருப்பார்.அன்று முதல் திதியாகிய "பிரதமையும்". மறு நாள் இன்னும் ஒரு 12டிகிரி விலகியிருப்பார். அன்று இரண்டாவது திதியாகிய துதியையும், இப்படியே தொடர்ந்து 3. திருதியை, 4. சதுர்த்தி, 5. பஞ்சமி, 6. சஷ்டி, 7. சப்தமி, 8. அஷ்டமி, 9. நவமி, 10. தசமி, 11. ஏகாதசி, 12. துவாதசி. 13. திரயோதசி, 14. சதுர்தசியும், 15-ம் நாள் பெர்ணமித் திதியும் ஏற்படுகின்றது. சந்திரன் அம்மாவாசையில் இருந்து சிறிது, சிறிதாக வளர்வதால் இவைகள் எல்லாம் வளர் பிறைத் திதிகள் என்று அழைக்கப்பெறுகின்றன. இந்த 15 நாட்களையும் சுக்கிலபக்ஷ் திதிகள் என்பார்கள்.

அதே போல் பௌர்ணமி திதியில் இருந்து சந்திரன் தினமும் சிறிது, சிறிதாக தேய்கிறார். அவற்றிற்கும் முறையே அந்த 15 திதிகளின் பெயர்களே குறிப்பிடப்படும். ஆனால் தேய்பிறையாக உள்ளதால் (தேய்-பிறைத் திதிகள்) கிருஷ்ணபக்ஷ் திதிகள் எனக் கூறுவார்கள். .

புத்தி சுவாதீன முற்றோர்; அமாவாசை, பூரணை, அட்டமி போன்ற திதிகளில் (கனத்த நாட்களில்) மிகவும் கடுமையாக (வேகமாக) உள்ளவர்களாக காணப்படுவது கிரகங்கள் புவியில் உள்ள உயிகள் மீது தாக்கத்தினை உண்டு பண்ணுகின்றன என்பதற்கு மற்றுமோர் உதாரணமாகும்.

வாரம்:
ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய கிழமைகள் வாரம் எனப்படும். இவை கிரகங்களின் பெயர்களில் அமைந்துள்ளமை கவனிக்கத்தக்கது. (ராகு, கேது கிரகங்களிற்கு சொந்த கிழமையும் இல்லை, சொந்த வீடும் இல்லை).

நட்ஷத்திரம்:                                                                                                                      
சந்திரன் இராசி மண்டல வலயத்தை சுற்றி வரும் போது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எந்தப் பிரிவில் எந்த நட்சத்திரத்தின் மேல் நகர்கின்றதோ அப் பிரிவுக்குரிய நட்சத்திரம் அந்த நேரத்திற்குரிய நட்சத்திரமாக கொள்ளப்படுகின்றது.

கரணம்:
கரணம் என்பது திதியில் பாதியாகும். அதாவது 6-டிகிரி கொண்டது ஒரு கரணம் ஆகும். கரணங்கள் மொத்தம் 11-ஆகும். அவையாவன:1. பவ,  2. பாலவ,  3. கெலவ,  4. தைதூலை,  5. கரசை,  6. வணிசை,  7. பத்தரை,  8. சகுனி,  9. சதுஷ்பாதம்,   10.  நாகவம்,  11. கிம்ஸ்துக்னம்.

இன்றைக்கு என்ன திதி என்று பஞ்சாங்கத்தில் கொடுத்து இருப்பார்கள். அதை எப்படிக் கணக்கிடுவது, அதன் உபயோகம் என்ன என்பது பற்றியும் அறிய வேண்டிய காலம் வரும் போது எழுதுகிறோம்.

யோகம்:
இரு வகையான யோகங்கள் பஞ்சாங்கத்தில் குறிக்கப்படுகின்றன. முதலாவது சூரியனும், சந்திரனும் சம்பந்தப்பட்டது. அதாவது வானமண்டலதில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து சூரியனுக்கும், சந்திரனுக்கும் உள்ள மொத்த தூரம் ஆகும். இன்னும் சற்று விளக்கமாகக் கூறப்போனால் சூரியன், சந்திரனின் ஸ்புடங்களையும் கூட்டினால் வருவதே இந்த யோகம் ஆகும். இந்த யோகங்கள் மொத்தம் 27-ஆகும். இதனை " நாம யோகம்" என்பார்கள். அவையாவன:

1.விஷ்கம்பம்,   2.ப்ரீதி,   3.ஆயுஷ்மான்,  4.சௌபாக்யம்,   5.சோபனம்,  6.அதிகண்டம்,  7. சுகர்மம்,   8. திருதி, 9.சூலம்,  10.கண்டம்,  11.விருதி, 12.துருவம், 13. வியாகாதம்,  4. ஹர்ஷணம், 15. வஜ்ரம், 16. சித்தி, 17.வியதிபாதம், 18. வரீயான்,  19.பரீகம்,  20. சிவம், 21. சித்தம்,  22. சாத்தீயம், 23. சுபம்,  24.சுப்ரம், 25.பிராம்யம்,  26.ஐந்திரம்,  27. வைதிருதி.

மற்ற யோகம் சுபாசுப யோகம்; சித்த யோகமும் அமிர்த யோகமும் சுபகருமங்களுக்கு உரிய சுப யோகங்களாகும். மரண யோகம், நாச யோகம், உற்பாத யோகம், பிரபலா நிஷ்ட யோகம், திரிபுஷ்கர யோகம் எனபன சுப கருமங்களுக்கு விலக்கப்படும் அசுப யோகங்களாகும்.

நக்ஷ்த்திராத்தையும், கிழமையையும் வைத்தும் யோகம் கணக்கிடப்படுகிறது. இன்ன இன்ன கிழமைகளில் இந்த இந்த நக்ஷ்த்திரங்கள் வந்தால் இன்ன யோகம் என வகுத்து அதன்படி கணக்கிடப்படுகிறது.

உதாரணமாக திங்கள் கிழமை அன்று அஸ்வனி, பரணி, திருவாதிரை, பூசம், ஆயில்யம் பூரம், உத்திரம், ஹஸ்தம், அனுஷம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய 15 நக்ஷ்த்திரங்கள் வருமேயாகில் அன்று சித்தயோகம் வரும்.

ரோகிணி மிருகசீரிஷம், புனர்பூசம், ஸ்வாதி, திருவோணம் ஆகிய 5 நக்ஷ்த்திரங்கள் வந்தால் அமிர்த யோகம் வரும்.

சோதிட காலவாய்பாடு


60 தற்பரை =  1 வினாடி

60 வினாடி =  1  நாளிகை
60 நாளிகை =  1  நாள்
365 நாள் + 15 நாளிகை + 31 விநாடி + 15 தற்பரை = 1 சௌர வருஷம்

60 வினாடி =  1 நாழிகை
60 நாழிகை =  1 நாள்
2 1/2 நாழிகை =  1 மணி
2 1/2 வினாடி =  1 நிமிஷம்

ஒரு நாள் :  60 நாழிகை (24 மணி)
ஒரு நாழிகை :  60 விநாழிகை
ஒரு விநாழிகை :60 லிப்தம்
ஒரு லிப்தம் :  60 விலிப்தம்
ஒரு விலிப்தம் :  60 பரா
ஒரு பரா :  60 தத்பரா

ஜோதிட விளக்கம்:

பஞ்சாங்க குறிப்பு:

சௌர வருஷம்:  சூரியன் மேடராசியின் ஆரம்ப நட்சத்திரத்திரமான அஸ்வினியில் பிரவேசிக்கும் காலம் முதல் மீனராசியின் கடைசி நட்சத்திரமான ரேவதியை விட்டு நீங்கும் காலத்தைக் குறிக்கும் (Sidereal revolution of Earth round the Sun). இக்காலப்பகுதி; சராசரியாக 365 நாள், 15 நாடி, 23 வினாடிகளைக் கொண்டதாகும்.

சாயன வருஷம்: சூரியன் மேஷாயன விஷூவத்தில் பிரவேசித்து திரும்ப மேஷாயன விஷூவத்தை வந்தடையும் காலத்தைக் குறிப்பதாகும் Tropical revolution of Earth round the Sun. இக் காலப்பகுதி; 365 நாள், 14 நாடி, 32 வினாடிகளைக் கொண்டதாகும்.

சாந்திர வருஷம்:  சௌரவருஷப்பிறபிற்கு முன் அதனை அடுத்து ஆரம்பிக்கும் பூர்வபக்கப் பிரதமை முதல் அடுத்த சௌர வருஷப்பிறபுக்கு முன் நிகழும் அமாவாசை முடியவுள்ள காலத்தைக் குறிப்பது. இக் காலப் பகுதி சுமார் 354 நாட்கள் கொண்டது.

சௌர மாதங்கள்:  மேடம் முதல் மீனம் ஈறாகவுள்ள பன்னிரண்டு ராசிகளிலும் சூரியன் சஞ்சரிக்கும் சித்திரை முதல் பங்குனி வரையான 12 காலப் பிரிவுகளாகும். பகல் மானத்துள் சங்கிராந்தி நிகழ்ந்தால் அன்றும்; இரவு நிகழுமாயின் மறுநாளும் மாதப்பிறப்பாக கொள்ளப்படும்.

சாந்திர மாதங்கள்:  பூர்வப்க்க பிரதமை தொடக்கம் அமாவாசைமுடியும்வரை உள்ள சைத்திரம் முதல் பாற்குண்ம் வரையான 12 காலப் பிரிவுகளாகும். மூன்று சௌர வருஷத்தில் 37 சாந்திர மாதங்கள் நிகழும். அதனால் சௌரமானத்துடன் சாந்திரமானம் இணங்கிச் செல்லும் பொருட்டு ஓர் சௌரமாதத்தில் இரண்டு அமாவாசை நிகழ இடையில் வரும் சாந்திரமாதம் "அதிகமாதம்" என் நீக்கப்படும்.

தமிழ் தேதி: சூரிய உதயம் முதல் மறுநாள் சூரிய உதயம் வரையும் உள்ள காலமாகும்.

ஆங்கிலத் தேதி: இரவு 12 மணி தொடக்கம் மறுநாள் இரவு 12 மணி வரையும் உள்ள 24 மணித்தியாலங்களைக் குறிக்கும்.

இஸ்லாமிய தேதி:  சூரிய அஸ்தமனம் முதல் மறுநாள் சூரிய அஸ்தமனம் வரை உள்ள காலப் பகுதியாகும்.

"அவமா" : ஒரு தினத்தில் மூன்று திதிகள் சம்பந்தப்பட்டால் அன்று "அவமா" அழைக்கப்படும்.

திரிதினஸ்புருக்: ஒரு திதி மூன்று நாட்கள் சம்பந்தப்பட்டு இருந்தால் அது "திரிதினஸ்புருக்" என்று அழைக்கப்படும்.

0 கருத்துகள்:

 


ஜோதிடக்கலை - Templates Novo Blogger 2008
This template is brought to you by : allblogtools.com Blogger Templates